சொல் தோற்றப் பகுப்பாய்வு

பாரதத்தின் தொன்மையான மொழி தமிழா சமஸ்கிருதமா என்ற போட்டி ஒருபக்கம் இருந்தாலும், அதற்குள் செல்லாமல், நிகழ்காலத்தில் நல்வினைகளை ஏற்படுத்தும் பொருட்டு இந்த வேர்ச்சொல்லாய்வை முன்வைக்கிறேன். தொல்காப்பியர் கூறியதுபோல், சொல் என்பது பொருள் குறிப்பன. ஒவ்வொரு முறை நான் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட தியான நூல்களைத் தமிழாக்கம் செய்யும்போதும் அவற்றை மூலச்சொல்லின் உட்பொருளுடனும் கருத்துடனும் திறம்பட தமிழாக்கம் செய்யத் திணறியதும், தியானம் சார்ந்த எண்ணங்களையும் கருதுக்களையும் முடிந்தவரை தூய தமிழில் கடத்தவே நான் இந்த ஆய்வைத் தொடங்கக் காரணம்.

அந்த வினையின் காரணமாக இதை எழுதுகிறேன். நான் தமிழறிஞனல்ல, தமிழில் புழங்குபவன். தவறுகள் இருப்பின் திருத்தவும்.

Mindfulness / தொடர்நிறைகவனம்

Mindfulness meditation என்பதை பாளியில் satipaṭṭāna (सतिपट्ठान, ச/ஸதிபட்டான), சமஸ்கிருதத்தில் smṛityupasthāna (स्मृत्युपस्थान) - அதாவது, ஸ்ம்ருதி (smruti) உபஸ்தானம் (upasthānam) என்று கூறுவர்.

  • ஸதி/சதி என்ற பாளி சொல்லின் வேர்ச்சொல் சமஸ்கிருதத்தில் ஸ்ம்ருதி (smruti). அதன் உட்பொருள் "நினைவில் நிறுத்தல்/கொள்ளுதல்" என்பதாகும் (recollection/remembering).

  • உபஸ்தானம் என்றால் அருகில் நின்று, சேவை செய்து, உடனிருந்து என்றெல்லாம் பொருள் வரும்.

ஆனால் "Mindfulness meditation" என்பது:

  • இயங்குநிலை கொண்டது

  • தொடர்புநிலை கொண்டது

  • செயல்பாட்டுடன் கூடியது

  • முனைப்பு நிலை கொண்டது

இந்த உரையில் உள்ள பயிற்சி "அடித்தளங்களை" உருவாக்குவது பற்றியது அல்ல மாறாக நிர்வாணம்/விடுபெறுவது பற்றி விளக்குபவை. ஆதலால் "Four foundations of mindfuless" என்ற ஆங்கிலச் சொல்லாடல் தவறானது. அது உடல், உணர்வு, மனம் மற்றும் நிகழ்வுகளுக்குத் தொடர்ச்சியான, மறவாத கவனத்தைக் கொண்டுவருவதைப் பற்றியது. ஒருவகையில் நம் கவனம் தியான பொருட்களின் மேல் பசை போன்று ஒட்டிக்கொள்ளல் வேண்டும் என்றும் இதை திறம்பட சொல்லலாம். ஆதலால் நான் satipaṭṭānā/Mindfulness என்ற சொல்லுக்கு "தொடர்-நிறை-கவனம்" என்று தமிழில் ஒரு சொல்லை உருவாக்குகிறேன். இதை உள்வாங்கிக் கொள்வது புரிதலுக்கும் பயிற்சிக்கும் மிகவும் இன்றியமையாதது.

தொடர்நிறைகவனம் என்பது அலைந்து செல்லும் உணர்தல் அல்ல, மாறாக ஊசிமுனையில் நூல் கோர்ப்பது போன்ற துல்லியமான தொடர்பு ஏற்படுத்துவது. தொடர்நிறைகவனம் என்பது பின்னணியில் உள்ள ஒன்றை சோம்பலாகக் கவனிப்பது அல்ல. நாம் வேலை செய்கையில் கூடவே இசையைக் கேட்பது போல அல்ல. அது, கவனம் ஒரு இலக்கைத் தொடுவதைப் போல, பொருளைத் தீவிரமாக நேருக்கு நேர் எதிர்கொண்டு மோத வேண்டும். மேலும் தொடர்நிறைகவனம் என்பது:

  • பொருளை நோக்கி விரைந்து செல்ல வேண்டும்

  • பொருளில் ஒட்டிக்கொள்ள வேண்டும்

  • பொருளை ஊடுருவிச் செல்ல வேண்டும்

Dissatisfaction / துக்கம் / மனக்குறை

துக்கம் பொதுவாக "துன்பம்" என்று மொழிபெயர்க்கப்படுகிறது. ஆனால் அதன் சொற்பிறப்பியல், மிகவும் நுணுக்கமான ஒரு பொருளை வெளிப்படுத்துகிறது. துக்கம் என்ற சொல்லின் வேர் சமஸ்கிருதம்/பாளி மொழியில் உள்ளது.

தேர்ச் சக்கர உவமை

துக்கத்தின் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சொற்பிறப்பியல் பகுப்பாய்வு, அதை பழங்கால ஆரிய நாடோடி வாழ்க்கையின் சொற்களுடன் தொடர்புபடுத்துகிறது.

  • து`: மோசமான, கடினமான அல்லது தவறான என்று பொருள் தரும் ஒரு முன்னொட்டு. Eg: துஷ்டன்.

  • ஹ்க: முதலில் ஒரு "துளை" அல்லது "ஓட்டை" குறிப்பிட்டது, குறிப்பாக ஒரு தேர் சக்கரத்தின் அச்சுவத்துளை.

இச்சூழலில், 'துக்கம்' என்பது 'தவறான துளை' கொண்ட ஒரு சக்கரத்தை விவரிக்கிறது. அது மையத்தை விட்டு விலகிய, பொருந்தாத அல்லது உடைந்த துளையாகும். தேரும் அது பயணிக்கும் தெருவும் எவ்வளவு அழகாக இருந்தாலும், இது ஒரு மேடு பள்ளமான, வசதியற்ற பயணத்திற்கு வழிவகுக்கிறது.

இதற்கு நேர்மாறாக, அதன் எதிர்மாறான சொல் 'சுக' ஆகும் (இதில் 'சு' என்றால் 'நல்ல' என்று சமஸ்கிருதத்தில் பொருள்). இது ஒரு மென்மையான, எளிதான பயணத்தைத் தரும், கச்சிதமாக மையப்படுத்தப்பட்ட ஒரு அச்சக்கட்டைத் துளையை விவரிக்கிறது.

புத்தத்தில் துக்கத்தின் புரிதல்

ஹ்க எனும் இந்தத் துளையானது நிறைவாக இருக்கும் மனதில் விழும் ஒரு துளையாகக் உவமை கொள்ளலாம். அதன் தொடர்ச்சியாக, புத்த மார்க்கத்தில் துக்கம் என்பது மனம் நிறைவற்று இருக்கும் இலக்கணத்தைக் குறிக்கிறது. நிலையாமையே நிலையானதாக இருப்பதால் ஒரு கணத்தில் இன்பமுற்ற நம் மனதில் அந்த இன்பம் மறைகையில் மனநிறையாமையை (மனக்குறையை) எழுகிறது.

மனக்குறை அறுபுலன் சார்ந்த அனைத்து பொருட்களினாலும் எழலாம். அனைத்து செல்வங்களையும் கொண்ட உலக மகா பணக்காரர்களும் மனக்குறையோடுதான் வாழ்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. விபஸ்ஸனா பயிற்சியால் அடையும் ஞானமானது மட்டுமே இந்த மனக்குறையை முற்றிலும் போக்கி நிரந்தரமாக மனதை நிறைவாக வைத்துக்கொள்ள வழிசெய்யும்.

Vēdanā / வேதனை

வேதனை என்ற சொல்லின் வேர் சமஸ்கிருததிலும் பாளியிலும் உள்ளது. உண்மையில் வேதனை என்றால் உணர்வு என்று மட்டுமே பொருள். ஆங்கிலத்தில் sensation, feeling. துக்க/துயர/சோக உணர்வு என்று அதன் பொருள் தமிழில் முற்றிலும் தவராகத் திரிந்துள்ளது.

வேதனை (वेदना / vēdanā) என்ற சொல், சமஸ்கிருத வினைச்சொல் வேரான 'வித் / வேத் (विद् / वेद्)' என்பதிலிருந்து வருகிறது.

வேர்ச்சொல்

வித் (vid) = "அறிதல், உணர்தல், அனுபவித்தல்"

இந்த வேர்ச்சொல்லிலிருந்து நாம் பெறுபவை:

  • வேத (वेद): அறிவு

  • வேதயதி (वेदयति): அறியப்படுத்துதல், உணரச் செய்தல்

  • வேதனா (वेदना): உணரப்பட்ட அல்லது அனுபவிக்கப்பட்டது

இலக்கண அமைப்பு

  • வேத: உணர்தல்/அறிதல்

  • னா: ஒரு செயல் அல்லது நிலையைக் குறிக்கும் அருவப் பெயர்ச்சொல் விகுதி

எனவே, வேதனை என்பதன் நேரடிப் பொருள் "உணர்வதன் / அனுபவிப்பதன் செயல் / நிலை" என்பதாகும். புத்த பாளி பயன்பாட்டில், வேதனை என்பது குறிப்பாக அனுபவத்தின் உணர்வுத் தொனியைக் குறிக்கிறது, உணர்ச்சியை அல்ல.

மூன்று வகையான வேதனைகள்:

  • துக்க வேதனை: விரும்பத்தகாத உணர்வு

  • சுக வேதனை: விரும்பத்தக்க உணர்வு

  • துக்கமற்ற சுகமற்ற வேதனை: நடுநிலை உணர்வு

முதலில் இந்தச் சொல்லுக்கு "தொடர்ச்சியால் ஏற்படும் உணர்வு / அறிகுறி" என்று பொருள். ஆரம்பகாலப் புத்தத்தில், பஸ்ஸ (தொடர்பு) -> வேதனா (உணர்வின் தன்மை) -> தன்ஹா (ஆசை) என இந்தத் தொடர் காணப்படுகிறது. இந்தச் சங்கிலிப் பிணைப்பு பிரதிட்டைசமுத்பாதத்தில் தோன்றுகிறது.

எனவே, வேதனா ≈ அனுபவத்தின் உடனடி உணரப்படும் தன்மை.

Skandha / ஸ்கந்த

ஸ்கந்த (स्कन्ध / skandha, பாளி: கந்த) என்ற சொல், சமஸ்கிருத மூலச்சொல்லான ஸ்கந்த் (स्कन्द्) என்பதிலிருந்து வந்தது.

வேர்ச்சொல்

ஸ்கந்த்

  • துள்ளுதல், பாய்தல், பொழிதல், சிந்துதல், வெளிப்படுதல்

  • வெடித்து வெளிவருதல் அல்லது பரவுதல்

ஸ்கந்தத்தின் மூலப் பொருட்கள்

ஆதி சமஸ்கிருதப் பயன்பாட்டில், ஸ்கந்தம் என்பதற்குப் பின்வரும் பொருட்கள் இருந்தன:

  1. மரத்தின் தண்டு

  2. முக்கிய உடல் அல்லது திரள்

  3. குவியல் / திரள் / தொகுப்பு

  4. தோள் அல்லது உடலின் மேற்பகுதி

ஒரு மரத்தின் அடிமரத்திலிருந்து அதன் பாகங்கள் பரவுவது போல, ஒரு அடிப்பகுதியிலிருந்து கிளைத்து வெளிப்படும் அல்லது உருவாகும் ஒன்றையே இது குறிக்கிறது.

புத்த மார்க்கத்தில், ஸ்கந்தம் என்பது நாம் மனிதன் என்று அழைப்பதை உருவாக்கும் கூறுகள் அல்லது கட்டுகள் அல்லது தொகுப்புகள் என்பதாகும்.

ஐந்து தொகுப்புகள்:

  1. ரூபம்: வடிவம்/உடல்

  2. வேதனை: உணர்வு நிலை

  3. சஞ்ஞா / சஜ்ஞா: புலக்காட்சி

  4. சங்கார / சம்ஸ்கார: மன உருவாக்கங்கள்

  5. விஞ்ஞான / விஜ்ஞான: அறிவு

எனவே, கட்டு = செயல்முறைகளின் திரள், தொகுப்பு. ஸ்கந்தத்தை ஒரு நிரந்தரமான அலகாகக் கருதாமல், பின்வருமாறு கருதலாம்:

  • ஒரு குவியலாக

  • ஒரு தொகுப்பாக

  • ஒரு சேர்க்கையாக

  • செயல்முறைகளின் திரளாக

இந்த உருவகம் மரக்கட்டை -> பெரிய திரள் -> குவியல் -> திரள் என்பதிலிருந்து வந்திருக்கலாம்.

எனவே, பஞ்சஸ்கந்தம் என்பதற்குச் சொல்லகராதிப்படி "நாம் மனிதர் என்று அழைப்பதற்குக் காரணமான ஐந்து குவியல்கள்/தொகுப்புகள்" என்று பொருள். இதற்கான மிக நெருங்கிய கருத்தியல் சமமான தமிழ்ச்சொற்கள் முருகப் பெருமானின் பெயராக ஸ்கந்தம் என்ற வார்த்தையின் பயன்பாடு, தத்துவத்தை விட மொழியியல் மற்றும் வரலாறு சார்ந்தது.

முந்தைய விளக்கத்தின்படி, ஸ்கந்தம் என்பதற்கு நேரடி அர்த்தம்:

  • வெடித்து/தெறித்து வெளி வந்தவர்

இது அவருடைய பிறப்புப் புராணத்தைக் குறிக்கிறது, அதில் அவர் சிவனின் வித்து/நெருப்பிலிருந்து திடீரென வெளிவந்து, பின்னர் கார்த்திகை நட்சத்திரங்களால் வளர்க்கப்பட்டார். தமிழ் ஒலியியல், சமஸ்கிருத ஒலிக்குழுக்களான sk -> k என எளியதாக்கும்.

எடுத்துக்காட்டுகள்:

  • skanda -> kanda

  • skandapurāṇa -> kandapurāṇam

கோட்பாட்டு முக்கியத்துவம்

புத்ததில் கந்தக் கோட்பாடு ஒரு நிரந்தர "நான்" என்ற மாயையை அகற்றுகிறது. ஒவ்வொரு திரளும் சார்புநிலை தோற்றத்தினால் எழுந்து ஒழிகிறது. அவற்றில் அனைத்திலும் பற்றுதல் (உபாதானம்) மனநிறையாமைக்கு வழிவகுக்கிறது. ஞானப் பயிற்சி அவற்றின் நிலையற்ற தன்மையை ஆராய்ந்து, பற்றைத் தளர்த்தி, நிர்வாணத்தை நோக்கிய பாதையைத் திறக்கிறது.

சின்னவியல் (Symbolism) மற்றும் ஞானம்

சம்யுத்த நிகாயத்தில் உள்ள "தேர்" போன்ற உருவகங்கள், ஒரு தேர் அதன் பாகங்களைச் சார்ந்திருப்பதைப் போலவே, ஆன்மா என்பது தொகுப்புகளின் மீது உள்ள ஒரு மரபார்ந்த பெயரிடலாக மட்டுமே உள்ளது என்பதை விளக்குகின்றன. இப்படி ஒன்றுக்கொன்று சார்ந்திருக்கும் நிலையை உணர்தல், புத்த ஞானத்திற்கும், அகந்தை அடிப்படையிலான மனக்குறைகளை நீக்குவதற்கும் மையமாக அமைகிறது.

Shamatha / சமதா

சமதா (சமஸ்கிருதம்: śamatha; பாளி: samatha) என்பதன் பொருள் "அமைதி", "அமைதியான நிலைத்திருப்பு" அல்லது "தியான அமைதி" என்பதாகும். இது śama (அமைதி, அமைதிப்படுத்துதல், குளிர்வித்தல்) மற்றும் tha (தங்குதல், நிலைத்திருத்தல், அல்லது வசித்தல்) ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டது. இது அமைதியான, நிலையான மற்றும் கவனமான நிலையை அடைவதற்காக மனதை அமைதிப்படுத்தும் பயிற்சியைக் குறிக்கிறது.

சொல் தோற்றப் பகுப்பாய்வு

  • ஷம: 'ஷம்' (அமைதியாக இருத்தல், அமைதி கொள்ளுதல் அல்லது அணைத்தல்) என்ற வேரிலிருந்து பெறப்பட்டது, ஷம என்பது மனக் கிளர்ச்சி, உணர்ச்சிகள் மற்றும் எண்ணங்களின் அமைதிப்படுத்தலைக் குறிக்கிறது.

  • தா: இந்தப் பின்னொட்டு "நிலைத்திருத்தல்," "வசித்தல்" அல்லது "நிலையான தன்மை" என்பதைக் குறிக்கிறது.

  • இணைந்த பொருள்: ஒன்றாக, ஷமத என்பது "அமைதியில் நிலைத்திருத்தல்" அல்லது "அமைதியான நிலைத்திருத்தல்" என்பதைக் குறிக்கிறது.

சூழல் சார்ந்த பொருள்

  • தியானப் பயிற்சி: இது மன ஒருமுகப்பாடு, கவனம் மற்றும் அமைதியை வளர்ப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு அடிப்படை புத்த தியான நுட்பமாகும், இது பெரும்பாலும் விபசனாவிற்கு முரணாகக் குறிப்பிடப்படுகிறது.

  • மனநிலை: இது மனதில் உள்ள "அலைக்கழிப்பின் புயலை" அமைதிப்படுத்தி, எளிமை, நிலைத்தன்மை மற்றும் கவனச்சிதறல் இல்லாத நிலையைக் குறிக்கிறது.

  • மொழிபெயர்ப்பு: "அமைதியான நிலைத்திருத்தல்" என்பதற்குக் கூடுதலாக, இது பெரும்பாலும் அமைதி, நிசப்தம் அல்லது அசைவற்றநிலை என மொழிபெயர்க்கப்படுகிறது.

திபெத்திய மரபில், இது ஷி-னே (Wylie: zhi-gnas) என்று அழைக்கப்படுகிறது, இது நேரடியாக "அமைதிப்படுத்துதல்" (ஷி) மற்றும் "நிலைத்திருத்தல்" (னே) என மொழிபெயர்க்கப்படுகிறது, இது சமஸ்கிருத அர்த்தத்துடன் பொருந்துகிறது.

Vipassanā / விபஸ்ஸனா

விபஸ்ஸனா (பாளி) அல்லது விபஷனா (சமஸ்கிருதம்) ஆகியவை வி- ("சிறப்பு", "தீவிரம்", "தனி", அல்லது "தூரம்") என்ற முன்னொட்டு மற்றும் பாஷ் ("பார்க்க" அல்லது "நோக்க") என்ற வினைமூலத்திலிருந்து உருவானவை. இது பொதுவாக "உள்ளறிவு," "தெளிவான பார்வை," அல்லது "மேலான பார்வை" என்று மொழிபெயர்க்கப்படுகிறது. இது யதார்த்தத்தின் நேரடி, அனுபவபூர்வமான உணர்வைக் குறிக்கிறது, குறிப்பாக மனதின் மற்றும் உடலின் நிலையற்ற தன்மையை. பஸ்ஸனா என்றால் ஆழ்ந்த ஒருமுகப்பாட்டின் மூலம் சரியான புரிதல் அல்லது உணர்தல், அல்லது மன மற்றும் உடல் சார்ந்த இந்த மூன்று பண்புகளைப் பற்றிய சரியான புரிதல் என்பதாகும். தியானிக்கும்போது ஆறு புலன்களிலும் (மனதுடன் சேர்த்து ஆறு புலன்கள்) கவனம் செலுத்துவதால் தமிழில் விபஸ்ஸனாவிற்கு "அறுபுலன் தியானம்" என்றொரு சொல்லை பரிந்துறைக்கிறேன். கூர்ந்து உள்நோக்குவதால் "உள்கூர்நோக்கல்" / "ஆழ்நோக்கல்" தியானம் என்றும் பரிந்துறைக்கிறேன். இவற்றில் தவறு இருந்தால் திருத்தவும்.

சொல் தோற்றப் பகுப்பாய்வு

  • வி- (वि): தீவிரம் (ஆழமாக), வேறுபாடு (தனித்தனியாக/தவிர), அல்லது மேன்மை (சிறப்பு) ஆகியவற்றைக் குறிக்கும் ஒரு முன்னொட்டு.

  • பஷ்/பஷ்யனா (पश्यना): பார்தல், நோக்குதல் அல்லது காணுதல் என்ற பொருள் கொண்ட 'பஷ்' (pash) என்ற வேர்ச்சொல்லிலிருந்து பெறப்பட்டது.

முக்கிய விளக்கங்கள்

  • தெளிவான பார்வை/உள்ளுணர்வு: பொருட்களை அவை தோன்றுவதைப் போலின்றி, அவை உண்மையில் உள்ளதை உள்ளபடியே நோக்குவது. இது பெரும்பாலும் தோற்றங்களுக்கு அப்பால் பார்த்து, இருப்பின் மூன்று குணங்களான நிலையாமை, மனக்குறை, மற்றும் அநாத்மம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதாக விளக்கப்படுகிறது.

  • பிரத்தியேக பார்வை: மன மற்றும் உடல் செயல்முறைகளுக்கு இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்ள, கூறுகளைத் தனித்தனியாகப் பகுப்பாய்வு செய்தல்.

  • நேரடிப் புலனுணர்வு: அறிவுசார் அறிவைப் போலல்லாமல், இது நேரடி, அனுபவப்பூர்வமான, அல்லது "கண்களுக்கு முன்னால்" உள்ள அவதானிப்பாகும் (சமஸ்கிருதத்தில் பிரத்யக்ஷத்திற்கு ஒப்பானது).

மஹாயான புத்தத்தில், இது திபெத்திய மொழியில் லாக்தோங் என்று அழைக்கப்படுகிறது, இதன் பொருள் "உயர்ந்த பார்வை" என்பதாகும்.

Jhāna / ஜானம்

ஜானம் (பாளி: ஜான, சமஸ்கிருதம்: தியான) என்பது, சிந்திக்க, ஆராய என்ற பொருள் கொண்டது. குறிப்பாக ஜாயதி (எரித்தல்) என்ற வினைச்சொல்லிலிருந்து தோன்றிய, பாரத-ஈரானிய வேரிலிருந்து உருவான ஆழ்ந்த தியானத் தணிக்கையிலோ அல்லது ஒருமுகப்படுத்தலிலோ மூழ்கியிருக்கும் நிலைகளைக் குறிக்கிறது. இது மனம் நன்மை பயக்கும் ஒரே ஒரு பொருளில் முழுமையாக மூழ்கியிருக்கும் ஒரு மனநிலையைக் குறிக்கிறது. அவ்வாறான ஒருங்குவியலில் மனம் இருக்கையில் பல்வேறுபட்ட காரணங்களால் எழும் மாசுக்கள் மனதைத் தாக்காமலும், முன்பே மனதைத் தாக்கியுள்ள மாசுக்களை எரித்துவிடுவதால் ஜாயதி என்ற சொல் அமையப் பெற்றிருக்கிறது.

சொற்பிறப்பியல் குறிப்புகள்

  • வினைச்சொல் மூலம்: பாளி வினைச்சொல்லான "jhāyati" (தியானம் செய்தல் அல்லது சிந்தித்தல்) மற்றும் சமஸ்கிருத "dhyā" என்பவற்றிலிருந்து பெறப்பட்டது.

  • பொருள்: இது ஆழ்ந்த ஒருமுகப்பாடு, மன அமைதி அல்லது ஆழ்ந்த ஈடுபாட்டைக் குறிக்கிறது. ஜானமானது கவனத்தை ஈர்த்து இன்ப நிலையில் வைத்துக் கொள்ளும் பண்புடையது.

  • சூழல்: இது பெரும்பாலும் தீவிரமான கவனத்தைக் குறிக்கும் அதே வேளையில், இது ஒரு பேரின்பமான, முழுமையான விழிப்புணர்வுடன் கூடிய மன ஒருங்கிணைந்த நிலையாகவும் வரையறுக்கப்படுகிறது, இது வெறுமனே "உற்று நோக்கல்" என்பதிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது.

வரலாற்று ரீதியாக, இது வேத, புத்த, ஜைன, அசீவக மரபுகளில் கவனம் செலுத்தும் தியானத்தின் நிலைகளைக் குறிக்கிறது.

        flowchart LR
    A["Dhyāna (Sanskrit)"]
    B["Jhāna (Pāli)"]
    C["ஜானம்/சானம் (Tamil)"]
    D["Chán (Chinese)"]
    E["Zen (Japanese)"]

    A --> B --> C --> D --> E
    

Sakkāya Diṭṭhi / சக்காய திட்டி

பாளியில் "சக்காய திட்டி", சமஸ்கிருதத்தில் "சத்காய திருஷ்டி" (सत्कायदृष्टि / satkāyadṛṣṭi) என்பது புத்த தத்துவத்தில் "சுய-அடையாளக் கோட்பாடு" அல்லது "நான் இந்த ஆன்மா" என்ற தவறான புரிதல் (Self-identity view/Personality belief) என்று பொருள்படும். இது உடலையும் மனதையும் "நான்", "எனது" என்று தவறாகக் கருதும் மனநிலையைக் குறிக்கிறது. இது புத்தத்தில் அழிக்கப்பட வேண்டிய பத்துச் சங்கிலிகளில் (Fetters) முதல் மற்றும் மிக முக்கியமான பிணைப்பாகக் கருதப்படுகிறது. அதாவது "அழிவுபடும் தொகுப்பின் உண்மையான மனப்பார்வை" என்று பொருள். பிணைப்பு எனப்படும் ஐந்து திரள்களான (உடல், உணர்வுகள், கருத்துருக்கள், மன உருவாக்கங்கள் மற்றும் உணர்வுநிலை) உள்ளே ஒரு நிலையான ஆன்மா உள்ளது என்ற தவறான நம்பிக்கையைக் குறிக்கிறது. இது சம்சாரச் (பிறப்பு-வாழ்வு-இறப்பு) சுழற்சியை இயக்கும் ஒரு அடிப்படைத் தவறான கண்ணோட்டமாகக் கருதப்படுகிறது.

ஆன்மா/ஆத்மா என்பது (பாரதத்தில் தோன்றிய) வைதிக, ஆசீவக மற்றும் ஜைன மார்க்கங்களில் உள்ள தத்துவம் / புரிதல் கோட்பாடு. புத்த மார்க்கம் தனது பயிற்சி பலன்களின் மூலம் ஆன்மாவற்ற தன்மையை முற்றிலும் வேறுபடுத்தி நிறுவுகிறது. அவ்வகையில் இந்த சக்காய திட்டி கருத்து புத்த மார்க்கத்திற்கே உரித்தானது.

முக்கிய அம்சங்கள்

  • வரையறை: சத் (இருப்பவை/உண்மையானவை) அல்லது சதா (இருப்பவை) + காய (உடல்/தொகுப்பு) + த்ருஷ்டி (கண்ணோட்டம்). இது தொடர்ந்து மாறிவரும் திரள்களில் "நான்" அல்லது "எனது" என்ற தவறான கண்ணோட்டமாகும்.

  • விளக்கம்: இது பெரும்பாலும் "ஆளுமைக் கண்ணோட்டம்," "சுய அடையாளக் கண்ணோட்டம்," அல்லது "அழிவுபடும் திரள் பற்றிய கண்ணோட்டம்" என மொழிபெயர்க்கப்படுகிறது.

  • தவறான நம்பிக்கை: பஞ்ச ஸ்கந்தங்களை (உடல், உணர்வு, உணர்தல், மனக்கருத்து, விழிப்புணர்வு) நிலையான "ஆன்மா/நான்/சுயம்" என்று கருதுதல்.

  • விளைவு: இது பேராசை, வெறுப்பு மற்றும் மயக்கத்திற்கு அடிப்படையாக அமைகிறது.

  • நீக்குதல்: ஞானம் மற்றும் விழிப்புணர்வு மூலம், இந்தத் "தன்னிலை/ஆன்மா" என்பது இல்லை என்பதை உணர்ந்து, இந்தத் தவறான பார்வையை அகற்றுவதே வீடுபேறு/முக்திக்கு வழிவகுக்கும். பௌத்த சூழலில் இது மூன்று கீழ்மையான கட்டுக்களில் (samyojana) முதலாவதாகும், மேலும் இது ஸ்ட்ரீம்-என்டரர் (சோதபன்னர்) நிலையில் நீக்கப்படுகிறது.

Dependent Origination / சார்புத்தோற்றம்

சமஸ்கிருதத்தில்: பிரத்தீத்யசமுத்பாத, பாளியில்: பட்டிச்சசமுத்பாத என்ற சொல், "சார்புத்தோற்றம்/சார்புத்தோன்றல்" அல்லது "நிபந்தனைக்குட்பட்ட இணைத்தோற்றம்" என்று நேரடியாக மொழிபெயர்க்கப்படும் இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது. இது காரணகாரியத்தின் அடிப்படைப் பௌத்தக் கோட்பாடாகச் செயல்படுகிறது.

சொற்பிறப்பியல் குறிப்புகள்

1. பிரத்தீத்ய = சார்பு

  • நேரடிப் பொருள்: சார்ந்திருத்தல் / சந்தித்தல்.

  • மூல அமைப்பு:

    • प्रति: மீண்டும், அடைதல் என்ற முன்னொட்டு மற்றும்

    • इ: செல்லுதல்/போதல் என்ற வினைமூலத்திலிருந்து பெறப்பட்டது.

  • இலக்கண வடிவம்: இது ஒரு பெயர்ச்செயவினை (gerund) ஆகும், அதாவது அடுத்த செயலுக்கு இடமளிக்கும் வகையில் "அருகில் செல்லுதல்" அல்லது "சார்ந்திருத்தல்" என்ற செயல் ஏற்கனவே நிகழ்ந்துவிட்டது என்பதைக் குறிப்பதாகும்.

  • சிறப்புப் பொருள்: ஒரு பொருள் தனியாக இருப்பதில்லை, மாறாக மற்றொன்றின் தொடர்பில் மட்டுமே அது "உறுதியாகிறது" அல்லது "நிலைக்கிறது" என்பதை இது குறிக்கிறது.

2. சமுத்பாத = ஒருங்கெழுந்த பாதை

  • உண்மைப் பொருள்: எழுச்சி, உற்பத்தி அல்லது தோற்றம்.

  • மூல அமைப்பு
    • சமம்: ஒருங்கமைந்த

    • உத்: மேல்/வெளியே (eg: உத்ராயனம்)

    • பாதை: கால் எடுத்து வைப்பது, செல்வது என்ற மூலத்தையும் இணைக்கிறது

  • சிறப்புப் பொருள்: இச்சொற்களின் முன்னொட்டுகளை வைத்து, "ஒருங்கி எழும்பும் பாதை" என மாறுகிறது. இதுவே எளிமையாக தோற்றம் என்று பொருள் படுகிறது.

1. அறியாமை
        |
      சார்பு
        |
        V
2. சங்காரம்
3. விஞ்ஞானம்
4. நாம-ரூபம்
5. ஆறு உறுப்புகள்
6. ஸ்பரிசம்/தொடர்பு
7. வேதனை
8. பேராசை
9. பற்று
10. உதித்தல்/பாவனை
11. பிறப்பு
12. மூப்பு, பிணி, மரணம், மனக்குறை
        |
    மறுபிறப்பு
        |
        V
1. அறியாமை

Doubt / விசிக்கிச்சா

பாளியில் விசிக்கிச்சா, சமஸ்கிருதத்தில் விசிகித்ஸா என்பது சந்தேகம் என்று மொழிபெயர்க்கப்படுகிறது. ஆனால் விசிக்கிச்சா என்பது புத்தரின் போதனைகளைப் பற்றிய சந்தேகமாகும். புத்தரின் போதனைகள் யாவை? அவை பொதுவாக:

  • யதார்த்தைப் (reality) பற்றியது

  • நாம ரூபத்தைப் பற்றியது

  • காரணம் - விளைவு பற்றியது

  • நான்கு சத்தியம் பற்றியது

  • சார்புத்தோன்றல் பற்றியது

விசிக்கிச்சா என்பது உண்மையைப் பற்றிய தயக்கம். வாய்மை முன்மொழியும் விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பதற்கு இது ஒரு அடிப்படையாகச் செயல்படுகிறது. இதைத் தீர்மானமின்மை என்றும் சொல்லலாம். தீர்மானமின்மை என்பது, புத்தத்தின் நான்கு உண்மைகள் மற்றும் ஒருவரின் செயலுக்கும் அதன் விளைவுக்கும் இடையிலான தொடர்பு ஆகியவற்றைப் பற்றி, ஒருவர் நம்பலாமா-வேண்டாமா என்ற இரண்டு எல்லைகளுக்கு இடையில் ஊசலாடும் ஒரு மன நிகழ்வாகும். இந்தத் தீர்மானமின்மை அனைத்து நேர்மறையான விஷயங்களுக்கும், குறிப்பாக உண்மையைக் காண்பதற்கும் தடைகளை உருவாக்குகிறது.