விபஸ்ஸனா தியானம் என்றால் என்ன?¶
விபஸ்ஸனா தியானம் என்பது புத்தருக்கு முன்பிருந்தே பழக்கத்தில் இருந்தாலும் ~500 BCE பின்பு புத்தர் நிகழ்த்திய மகா சதிபட்டான சூத்திரம் என்ற உரையை தொடர்ந்து புத்த துறவிகளால் எழுதப்பட்ட நூலில் இருந்து இது கற்பிக்கப் படுகிறது. இதை ஆங்கிலத்தில் படிக்க விரும்புவோர் இங்கே படிக்கலாம். இதை ஆங்கிலத்தில் "Four Foundations of Mindfulness" என்று மொழிபெயர்ப்பர். அதாவது "கவன பயிற்சியின் நான்கு அடித்தளங்கள்".
யோகிகள் (தியானிப்பவர்கள்) விபஸ்ஸனா அல்லது ஆழ்ந்தறிவு தியானத்தின் நோக்கத்தை புரிந்து கொள்ளவில்லை என்றால், அவர்கள் மன மற்றும் உடல் செயல்முறைகளைக் கவனிப்பதில் முழு மனதுடன் ஈடுபட மாட்டார்கள். அதன் விளைவாக, முன்னேற்றம் அடைய, இந்த நிகழ்வுகளின் உண்மையான தன்மையை அவர்களால் கண்டறிய முடியாது. எனவே, யோகிகள் விபஸ்ஸனா என்றால் என்ன என்பதையும் அதை எப்படிப் பயிற்சி செய்வது என்பதையும் சரியாக அறிந்து கொள்ள வேண்டும்.
விபஸ்ஸனா என்பது 'வி' மற்றும் 'பஸ்ஸனா' என்ற இரண்டு சொற்களின் சேர்க்கையாகும். இங்கு, 'வி' என்பது நாமம் (மனம்) மற்றும் ரூபம் (உடல்) சார்ந்த மூன்று பண்புகளைக் குறிக்கிறது. அம்மூன்று பண்புகள்:
நிலையாமை.
துன்பம், மனக்குறை, மனநிறைவற்ற தன்மை.
ஆன்மாவற்ற தன்மை, சுயமற்ற தன்மை.
பஸ்ஸனா என்றால் ஆழ்ந்த ஒருமுகப்பாட்டின் மூலம் சரியான புரிதல் அல்லது உணர்தல், அல்லது மன மற்றும் உடல் சார்ந்த இந்த மூன்று பண்புகளைப் பற்றிய சரியான புரிதல் என்பதாகும். தியானிக்கும்போது ஆறு புலன்களிலும் (மனதுடன் சேர்த்து ஆறு புலன்கள்) கவனம் செலுத்துவதால் தமிழில் விபஸ்ஸனாவிற்கு "அறுபுலன் தியானம்" என்றொரு சொல்லை பரிந்துறைக்கிறேன். கூர்ந்து உள்நோக்குவதால் "உள்கூர்நோக்கல்" தியானம் என்றும் பரிந்துறைக்கிறேன். இவற்றில் தவறு இருந்தால் திருத்தவும்.
நாம் விபஸ்ஸனா தியானம் செய்யும்போது, அதன் நோக்கம் மனம் மற்றும் உடல் நிகழ்வுகளின் நிலையாமை, மனக்குறை, அனாத்மம் என்ற மூன்று பண்புகளை முழுமையாக உணர்வதாகும். மனம் மற்றும் உடலின் இந்த மூன்று பண்புகளையும் முழுமையாக உணர்வதன் மூலம் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாசொல், காமம், பேராசை, தாகம், வெறுப்பு போன்ற அனைத்து தீயகுணத்தையும் நாம் ஒழித்துவிட முடியும். துன்பத்திற்குக் காரணம் பகை, பொறாமை, ஆணவம், சோம்பல் மற்றும் மந்தநிலை, மனக்குறை மற்றும் கவலை, அமைதியின்மை மற்றும் வருத்தம் ஆகிய களங்கங்களாகும். நம்மிடம் இந்தக் களங்கங்கள் இருக்கும் வரை, நாம் பலவிதமான துன்பங்களை அனுபவிப்பது உறுதி. இந்தக் களங்கங்கள் அனைத்தையும் அழித்த பிறகு, நாம் விடுதலையை - அதாவது துன்பத்தின் அழிவை அடைகிறோம்.
Mindfulness என்பதற்கு பாளியில் satipaṭṭāna (सतिपट्ठान, ஸதிபட்டான), சமஸ்கிருதத்தில் smṛtyupasthāna (स्मृत्युपस्थान) - அதாவது, ஸ்ம்ருதி (smruti) உபஸ்தானம் (upasthānam). Mindfulness meditation என்பதற்கு கவன தியானம் என்று அறிஞர்கள் மொழிபெயர்த்துள்ளனர்.
ஸதி/சதி என்ற பாளி சொல்லின் வேர்ச்சொல் சமஸ்கிருதத்தில் ஸ்ம்ருதி (smṛti). அதன் உட்பொருள் "நினைவில் நிறுத்தல்/கொள்ளுதல்" என்பதாகும் (recollection/remembering).
உபஸ்தானம் என்றால் அருகில் நின்று, சேவை செய்து, உடனிருந்து என்றெல்லாம் பொருள் வரும்.
ஆனால் "கவனத்துடன் தியானித்தல்" என்பது:
இயங்குநிலை கொண்டது
தொடர்புநிலை கொண்டது
செயல்பாட்டுடன் கூடியது
முனைப்பு நிலை கொண்டது
இந்த உரையில் உள்ள பயிற்சி "அடித்தளங்களை" உருவாக்குவது பற்றியது அல்ல. ஆதலால் "Four foundations of mindfuless" என்ற ஆங்கிலச் சொல்லாடல் தவரானது. அது உடல், உணர்வு, மனம் மற்றும் நிகழ்வுகளுக்குத் தொடர்ச்சியான, மறவாத விழிப்புணர்வைக் கொண்டுவருவதைப் பற்றியது. ஒருவகையில் நம் கவனம் தியான பொருட்களின் மேல் பசை போன்று ஒட்டிக்கொள்ளல் வேண்டும் என்றும் இதை திறம்பட சொல்லலாம். ஆதலால் நான் satipaṭṭānā/Mindfulness என்ற சொல்லுக்கு "தொடர்-நிறை-கவனம்/தொடர்-ஈர்ப்பு-கவனம்" என்று தமிழில் ஒரு சொல்லை உருவாக்குகிறேன். இதை உள்வாங்கிக் கொள்வது புரிதலுக்கும் பயிற்சிக்கும் மிகவும் இன்றியமையாதது.
அதேபோல் வேதனை என்ற சொல்லின் வேர் சமஸ்கிருததிலும் பாளியிலும் உள்ளது. உண்மையில் வேதனை என்றால் "உணர்வு" என்று மட்டுமே பொருள். அதை துக்க/துயர/சோக உணர்வு என்று அதன் பொருள் தமிழில் முற்றிலும் திரிந்துள்ளது. இங்கு நான் வெளிப்படையாக குறிப்பிட்டாலே ஒழிய எல்லா இடங்களிலும் வேதனை என்றால் உணர்வு என்ற பொருள் கொளல் வேண்டும்.